நாகர்கோவில் ஜூலை 6
குமரி மாவட்டம்
அஞ்சுகிராமம் பேரூராட்சி, கனகப்பபுரத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் 2022 – 2023-ன் கீழ் ரூ. 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டிட திறப்பு நேற்று விழாநடைபெற்றது. இவ்விழாவிற்கு அஞ்சுகிராமம் பேரூராட்சித் தலைவர் ஜானகி இளங்கோ தலைமை வகித்தார். அஞ்சுகிராமம் பேரூராட்சி உறுப்பினரும், பேரூர் கழகச் செயலாளருமான ராஜபாண்டி வரவேற்று பேசினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்து பேசும் போது கூறியதாவது:-
அங்கன்வாடி மையக் குழந்தைகளின் நலன் கருதி அவர்கள் படிக்கின்ற இடம் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். இந்த பருவத்தில் உள்ள குழந்தைகளின் மன நிலை தான் அவர்கள் வளர்ந்து இளைஞர்களாக வரும் போது ஒழுக்கத்துடன் விளங்குவதற்கு காரணமாக இருக்கும். குழந்தைகள், தாய்மார்கள் இந்த அங்கன்வாடி மையத்தில் தனது குழந்தைகளை நம்பிக்கையுடன் விட்டு செல்கின்றனர். அவர்களது நம்பிக்கை வீண் போகாத வகையில் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் குழந்தைகளுக்கு நல் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். மதம், ஜாதி என்று பாராமல் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்து, அவர்கள் வாழ்வில் உயர்வடைந்து வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் எதிர் காலத்தில் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ வர வேண்டும். சிறு குழந்தைகளை தாய்மார்கள் இரவு நேரங்களில் சீக்கிரமாக தூங்க வைக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. என அவர் பேசினார்.
பேரூராட்சி வார்டு உறுப்பினர் அமுதா தாமோதரன், மேட்டுக்கால் பாசன தலைவர் மேகனமுத்து, தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினிபகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வார்டு உறுப்பினர்கள் ராமசந்திரன், காமாட்சி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், பேரூர் கழக அவைத்தலைவர் ஜீவா, பேரூராட்சி துணைத் தலைவர் காந்திராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி, மேற்பார்வையாளர் நாகரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.