கன்னியாகுமரி அக் 4
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கி 12-10-2024 வரை நடைபெறுகிறது. 1-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தங்க கீரிடம், வைரக்கல் மூக்குத்தி போன்ற ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. திருக்கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ள கொலு மண்டபத்தில் தியாக சவுந்தரி அம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதனைத் தொடர்ந்து உற்சவ அம்பாளை மேள தாளம் முழங்க கோவில் அர்ச்சகர் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக உள்பிரகாரத்தை சுற்றி கொலு மண்டபத்திற்கு எடுத்து சென்றார். அங்கு அம்மனை எழுந்தருள செய்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், பூஜைகளும் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொலு மண்டபத்தில் கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் எழுந்தருளிய பகவதி அம்மனையும், அங்கு வைக்கப்பட்டிருந்த கொலுவினையும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வழிபட்டனர்.
இந்நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் தம்பித்தங்கம் உட்பட பலர் உடன் சென்றிருந்தனர்.