நாகர்கோவில், நவம்பர் 13 –
குமரியில் தொடர் மழையால் சாலைகளில் ஏற்படும் திடீர் பள்ளங்களை வெட்மிக்ஸ் மூலம் நிரப்ப நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குமரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர்ச்சியாக உருவாகி வரும் புயல்களினால் சாலையில் சரிவுகள் மற்றும் பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடசேரி, அப்டா மார்க்கெட், புத்தேரி உட்பட சில பகுதிகளில் சாலையில் தொடர் மழை காரணமாக திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது இவற்றை வெட்மிக்ஸ் மூலம் நிரப்பப்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மழையினால் சாலை பாதிப்புகள் அதிகம் இல்லை. தற்போது பள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வெட்மிக்ஸ் போட்டு நிரப்பப்படுகிறது. மழை நின்றபின் அங்கு தார் மூலம் சரி செய்யப்படும் என்றனர்.


