நாகர்கோவில், அக். 17 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலையை அதிமுகவினர் பராமரித்து வருகிறார்கள். எம்ஜிஆர் சிலை முன்பு சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி அதிமுக என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டில் எடப்பாடி மற்றும் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. அதிமுக கட்சி துவங்கி 54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். சிலையின் முன் பகுதியில் போர்டில் இருந்த எடப்பாடி படத்தை துணிவைத்து மறைத்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த அதிமுகவினர் ஓபிஎஸ் அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வடசேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



