இரணியல், ஏப்- 30
நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 2 வகுப்பறை கட்டிடம் கட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தில் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த பணி தொடக்க விழா இன்று நடந்தது. அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம். பி அவர்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் விஜய்வசந்த் எம்பி புதிய வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் வட்டார தலைவர் ஜெயசிங், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், தலைமை ஆசிரியர் சேவியர் கிரிஸ்கோ, டைட்டஸ் ஆபிரகாம், வில்சன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.