நாகர்கோவில் ஆக 23
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் சில நீர்நிலைகள் பழுதடைந்து வருகின்றன. குறிப்பாக மோதிரமலை – குற்றியாறு பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்து. பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக இல்லை. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் பழுதடைந்த பாலப்பணிகளை முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவிக்கையில்-
மோதிரமலை குற்றியாறு சாலையானது கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான பேச்சிப்பாறையிலிருந்து கோதையாறு செல்லும் சுமார் 15 கி.மீ நீளமுடைய சாலையில் கி.மீ 10/4-ல் இடதுபுறம் பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மாவட்ட இதர சாலையாகும். இச்சாலை முற்றிலும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான கோதையாறு மின் உற்பத்தி உலைகளில் இரண்டாவது உலை இச்சாலையில் கி.மீ 1/6-ல் இடதுபுறம் அமைந்துள்ளது. அரசு ரப்பர் கழகம், தமிழ் நாடு மின் உற்பத்தி கழக அலுவலர்கள் மற்றும் முடவன்பொத்தை, மாங்காமலை, விலாமலை. தச்சன்மலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இச்சாலையை பயன்படுத்துகிறார்கள். வனப்பகுதிக்குள் கி.மீ 0/4-ல் ஏற்கனவே அமைந்துள்ள தரைப்பாலம் 31.45 மீட்டர் நீளமுடையது. இந்த தரைபாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதாலும் மழைக்காலங்களில் வெள்ளம் வடிய ஒரு வார காலத்திற்கு மேல் ஆவதாலும் இதனால் இப்பகுதி மக்களுக்கு வேறு மாற்றுப் பாதை இல்லாததாலும் இத்தரைப்பாலத்தினை 16.6 மீட்டர் நீளத்தில் மூன்று கண்கள் கொண்ட உயர்மட்ட பாலமாக மாற்ற ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் வேண்டப்பட்டு வனத்துறை அனுமதியுடன் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
இப்பாலப்பணியின்போது மக்கள் சென்று வர ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக மாற்றுப்பாதை மலைப்பகுதியில் 21.08.2024 அன்று அதிகாலை பெய்த கனமழையினால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குழாய்கள் அடித்து செல்லப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக மாற்றுப்பாதை அமைக்கப்படி உத்தரவிடப்பட்டது. அதனடிபடையில் நெடுஞ்சாலை துறையினரால் ஆற்றில் வெள்ளம் குறைந்தவுடன் சேதமடைந்த மாற்று பாதையினை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. மாற்றுப்பாதை பணியில் ஏற்கனவே அடித்துச்செல்லப்பட்ட குழாய்களுக்கு பதிலாக புதியதாக குழாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன இப்பணியினை 24.08.2024 க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.