மார்த்தாண்டம், ஜூன் – 1
மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குமரியில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 முக்கிய சிவாலயங்களில் நட்டாலம் மகாதேவர் கோயிலும் ஒன்று ஆகும்.
இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது. நேற்று கோயில் திறக்கப்பட்ட போது, கோயில் முன்பகுதியில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கோவில் ஸ்ரீ காரியம். புருஷோத்தமன் என்பவர் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.