நாகர்கோவில், மே 21:
குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. சிற்றார் 1 அணை பகுதிகளில் 45 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.
வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல சுழற்சிகள் நிலை கொண்டு உள்ளதால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 4 ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மலை பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மலையோர பகுதிகளில் அதிகமாக மழை இருந்தது.
இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்தும் சற்று உயர்ந்தது. கன்னியாகுமரி, நாகர்கோவில், த் தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. காற்றும் வேகமாக வீசியது. நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் லேசான சாரல் இருந்தது. இரண்டு நாட்கள் நீடிக்கும் சாரல் மழை காரணமாக ஆறுகளிலும் நீர்வரத்து உயர்ந்துள்ளது. பேச்சுப்பாறை அணை நீர்மட்டம் 35.03 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 331 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 14.8 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 73 கன அடி தண்ணீர் வந்தது. சிற்றார் -1 4.03 அடி ஆகும். சிற்றா -2 4.13 அடி ஆகும் இருந்தது. பொய்கை 14.8, மாம்பழத்துறை ஆறு 24.85 அடியாக இருந்தது. முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 1.8 அடியாக உள்ளது.
குமரி குற்றாலம் என அழைக்கப்படும் திருப்பரப்பிலும் தண்ணீர் அதிக அளவில் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். மலையோர பகுதிகளில் மலை நீடிப்பதன் காரணமாக திற்பரப்பிலும் நீர்வரத்து இனி உயரும் வாய்ப்பு உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் சாகுபடி பணிகளையும் விவசாயிகள் தீவிரமாக தொடங்கி உள்ளனர். பேச்சுப்பாறை அணை நீர்மட்டமும் 35 அடி வரை இருப்பதால் திட்டமிட்டபடி ஜூன் 1 ம் தேதி அணை திறக்கப்படும் என தெரிகிறது.