நாகர்கோவில் பிப் 13
கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜரின் கல்வெட்டை உடைக்கப்பட்ட மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டில் பாலத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டை விஷமிகள் சேதப்படுத்தியமைக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் காமராஜரின் அறிவாற்றல் முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா மக்களின் விவசாயத்திற்கும், அதே வேளையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்திலும், இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் மாத்தூர் தொட்டில் பாலம் 1204 அடி நீளத்துக்கு கட்டப்பட்டுள்ளது.
காமராஜரின் முயற்சியால் 1969 ஆம் ஆண்டு மாத்தூர் தொட்டில் பாலம் திறக்கப் படுகிற நேரத்தில், அன்றைய நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் காமராஜர். அதன் பிறகு 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி யாக தேர்வு செய்யப் பட்டார். இடைத்தேர்தலில் அப்போதே 1 இலட்சத்து 20 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்கிற பெருமையும் காமராஜருக்கு உண்டு. மாத்தூர் தொட்டில் பாலத்தை இயற்கை வளம் குன்றாமல் நேரடியாக பாதுகாத்து வந்தவர் தான் காமராஜர். எனவே மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜரின் பெயரை அரசு சூட்ட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம். அதே நேரத்தில் கல்வெட்டை சேதப் படுத்தியவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.