நாகர்கோவில் மார்ச் 27
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சுஜிகுமார். இவருடைய மனைவி ஸ்டெல்லா.வயது முதிர்வால் காரணமாக கணவன்- மனைவியால் வீட்டு வேலை செய்ய முடியவில்லை. மேலும் 2 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசிப்பதால் அவர்களை கவனிக்கவும் ஆள் இல்லை. எனவே கணவன்- மனைவி இருவரையும் உடன் இருந்த கவனித்துக் கொள்வதற்காக காட்டாத்துறை செறுகோல் மடத்துவிளை பகுதியை சேர்ந்த புஷ்பம் என்பவரை பணிக்கு அமர்த்தினர்.
இந்த நிலையில் கடந்த 7-12-2024 அன்று ஸ்டெல்லாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். வீட்டில் ஆள் இல்லாததை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் நகையை திருடி விடக்கூடாது என்பதற்காக நகையையும் ஸ்டெல்லா உடன் கொண்டு வந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது ஸ்டெல்லா வீட்டில் இருந்து கொண்டு வந்த நகை மற்றும் கை, கழுத்தில் அணிந்திருந்த நகை என மொத்தம் 28 பவுன் நகையை புஷ்பத்திடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார்.
இதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து ஸ்டெல்லா வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது தான் மருத்துவமனையில் வைத்து கொடுத்து வைத்திருந்த நகையை புஷ்பத்திடம் கேட்டார். ஆனால் புஷ்பம் கொடுக்கவில்லை. வேலைக்கும் வராமல் நகையை அபகரித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டெல்லா சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பத்தை கைது செய்தனர். அவரிடம் ஸ்டெல்லா கொடுத்து வைத்திருந்த 28 பவுன் நகையை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகை சரிபார்க்கப்பட்டு ஸ்டெல்லாவிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.