ராமநாதபுரம், ஏப்.21-
எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம், அவர்களின் புத்தகங்கள் அரசுடமையாக்க வேண்டும் மேலும் தொண்டியில் புதிய கிளை நூலகம் கட்டிடம் திறக்க இருக்கின்றார்கள் அதற்கு இவர்களின் பெயரை வைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்று தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரும் சுய முன்னேற்ற நூல்களை முதன் முதலில் தமிழுக்குத் தந்தவரும் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவம் வாய்ந்த ஒரு இடத்தை பிடித்தவரும் வாசிப்பையும், எழுத்தையும் உயிர் மூச்சாகக் கொண்ட வரும் பன்னூல் அறிஞர் என பலரால் பாராட்டப்பட்டவருமான பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில்
27.4.1922 இல், பிறந்தவர். உலகத் தமிழர்கள் அனைவரும் வீட்டில் ஒரு நூலகம் கட்ட வேண்டும் அந்த நூலகத்தின் அலமாரிகளில் எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் புத்தகங்களை அடுக்கி வைக்க வேண்டும் அடுக்கி வைத்தது மட்டுமல்லாமல் அவை அனைத்தையும் படித்து பயன் பெற வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் பண்ணூல் ஆசிரியர் எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்கள். தமிழ்வாணன், பி.சி கணேசன், எம்.எஸ் உதயமூர்த்தி, மெர்வின் லேனா, இவர்களெல்லாம் வாழ்க்கை முன்னேற்ற நூல்களை எழுதுவதற்கு முன்னால் 1948 இல் எம் ஆர்.எம் அப்துல் ரஹீம் எழுதிய வாழ்க்கையில் வெற்றி எனும் நூல்தான் தமிழில் வெளிவந்த முதல் வாழ்வியல் நூலாகும்.
இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையான வாழ்க்கை முன்னேற்ற நூல் எதுவென்றால் ஷீவ் கேராய்,என்பவர் எழுதிய you can win என்கின்ற நூல்தான் அந்த நூல் 1978 ஆம் ஆண்டில்தான் எழுதப்பட்டது ஆனால் அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால் 1948- லேயே இதே தலைப்பில் வாழ்க்கையில் வெற்றி என்ற நூலை தமிழ் மண்ணுக்கு தமிழில் தந்தவர் எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்கள் தொடர்ந்து சுய முன்னேற்ற நூல்கள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு நூல்கள், சமய இலக்கியம் என எழுதிக் குவித்தார். 35,சுய முன்னேற்ற நூல்கள் தவிர 9, வரலாற்று நூல்கள், 8, மொழிபெயர்ப்பு நூல்கள், மற்றும் ஐந்து புதினங்களையும் படைத்துள்ளார்.
லியோ டா்ஸ்டாய் , ஆபிரகாம் லிங்கன், ஐசன் ஓவர், வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவரை கௌரவிக்க அன்றைய அமெரிக்காவின் அதிபர் ஐசன் ஓவர், வெள்ளை மாளிகைக்கு அழைக்கும் பொழுது அங்கு வந்து போகும் சமயத்தில் நான் இரண்டு நூல்களை எழுதி விடுவேன் என்று கூறி அமெரிக்க அதிபரின் அழைப்பை நிராகரித்து விட்டாராம் பிறகு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை நபிகள் நாயகம் என்ற தலைப்பில் உரைநடையில் எழுதினார். 800 பக்கங்கள் கொண்ட மொஹம்மட் தி ப்ராஃபட், இன்று ஆங்கில நூலையும் நபிகள் நாயகம் காவியம் என்று காப்பிய வடிவிலும் எழுதினார். இஸ்லாம் பற்றி மக்களுக்கு சரியான புரிதல் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கடுமையாக உழைத்து 2700 பக்கங்கள் கொண்ட இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். மேலும் இஸ்லாமிய தமிழ் புலவர்கள் என்ற நூலையும் எழுதினார். கவலைப்படாதே, உன்னை வெல்க, எண்ணமே வாழ்வு, சுபிட்சமாய் வாழ்க, உன்னை வெல்க, வியாபாரம் செய்வது எப்படி போன்ற, பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
சுதந்திர நாடு என்ற பத்திரிக்கையை தொடங்கி அதன் ஆசிரியராக பணியாற்றினார்.
மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார் பட்டம் பாராட்டுகளைத் தவிர்த்தார். தன் புகைப்படங்களை கூட வெளியிட விரும்பாத அளவுக்கு தன்னடக்கம் மிக்கவர். மேடைகளில் தன்னைப் பற்றியோ தன் எழுத்துக்களை பற்றியோ ஒருபோதும் இவர் பேசியதில்லை. தமிழின் தொடக்க கால சுய முன்னேற்ற நூல்கள், இஸ்லாமிய நூல்கள், நபிமார்கள் வரலாறு, வலிமார்கள் வரலாறு, இஸ்லாமிய கலைக்களஞ்சியம், என்று பலவகை நூல்களை எழுதிய எழுத்தாளர்
எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம்,அவர்கள் தன்னுடைய வரலாற்று நூல்களில் ஒரு ஆசிரியராகவும், தன்னுடைய வாழ்வியல் நூல்களிலே அவர் ஒரு குருவாகவும், நபிகள் நாயகம், இஸ்லாமிய கலைக்களஞ்சியம், வலிமார்கள் வரலாறு, நபிமார்கள் வரலாறு போன்ற நூல்களில் அவர் ஒரு ஞானியாகவும் திகழ்ந்தார். எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த 71 ஆண்டுகளில் எழுத்தை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இவர் 10.11.1993 ஆம் ஆண்டில் தனது 71 வது வயதில் மரணித்தார். அடுத்த நாள் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் காலமானார் எழுத்து மழை ஓய்ந்து விட்டது.
உலகத் தலைவர் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் என்ற பண்ணூல் அறிஞரை பாராட்டாதவரும் இல்லை அறியாதவரும் இல்லை அந்த அளவிற்கு எடுத்த எழுத்து துறையில் எண்ணிலடங்கா சாதனையை படைத்தவர்.
ஒரு கவிஞன் அழகாகச் சொன்னான். வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நின்று வாழும் வரை என்று சொன்னான். இறந்தாலும் தன் சீறிய கருத்துக்கள், சிந்தனைகள், எழுத்துக்கள்,என்று எல்லோருடைய மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பன்னூல் ஆசிரியர் திரு எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்களின் நூற்றாண்டு விழா முடிவுற்ற நிலையில் அவர் எழுதிய அனைத்து நூல்களையும் அரசுடமையாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு. எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்கள் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள நூலகத்திற்கு பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம் அப்துல் ரஹீம் அவர்களின் பெயர் சூட்டி அவரது புத்தகங்களை தமிழக அரசு அரசுடமையாக்க வேண்டும்.
மேலும் தொண்டியில் புதிய கிளை நூலக கட்டிடம் திறக்க இருக்கின்றார்கள் அந்த கிளை நூலகத்திற்கு எம்ஆர் எம் எம் அப்துல் ரஹீம் அவர்களின் பெயரை சூட்டி கௌரவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன், இவ்வாறு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.