மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமில், மனநலன் குறைபாடு, உடல் உறுப்புகள் குறைபாடு, கண் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதித்து, அவர்களுக்கு புதிய அடையாள அட்டை, அடையாள அட்டை புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது. இந்த முகாமில் 150-க்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் உள்பட 400-க்கு மேற்பட்டோருக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60-வது மணிவிழாவை முன்னிட்டு, தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மாற்றுத்திறனாளி அலுவலக அதிகாரிகள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வித்திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



