குமரி மாவட்டத்தில் விரைவில் களரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து, உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மா மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இளம்பெண்கள் பங்கேற்றனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வேலைக்கான கல்வி முறையை தான் இளைஞர்கள் இப்போது பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படுத்தப்படுவது இல்லை. எனவே இளைஞர்கள் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டு, மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது மாறிவரும் கால சூழ்நிலை, சுற்றுப்புற சூழல் பாதிப்பு, மாறிவரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை இளைஞர்களின் உடல் திறனை பாதிக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல் நலனுக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையால் விளையாட்டு துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் குளச்சல், பத்மநாபபுரத்தில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. இதில் பத்மநாபபுரத்தில் ஸ்டேடியம் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலைகள், விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு அகாடமி தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் களரி பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



