மதுரை ஆகஸ்ட் 11,
மதுரையில் ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
மதுரை மாநகரைப் பொருத்தவரை, நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ. 156. 60 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கி வைத்து ஓராண்டு ஆக போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து பாலம் ஸ்டேஷன் சாலை வழியாக செல்லூர் வரை மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேலும், மழை நீர் வடிகால்கள், பீ.பீ.குளம், காந்தி அருங்காட்சியகம் செல்லும் சந்திப்பில் அவசர ஊர்திகள் செல்வதற்கு சுரங்கப்பாதையும், நெல்பேட்டை, கோரிப்பாளையம், யானைக்கல், அண்ணா சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரின் முக்கிய இணைப்பு வழிகள் அமைக்கப்பட உள்ளன. இதனிடையே பாலம் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமுக்கம் மைதானத்திலிருந்து மேம்பாலம் அமைப்பதற்கு தற்போது முதல் கட்டமாக தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் துளையிடும் பணி நடைபெறுகின்றன. அவ்வழியே உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நோயாளியை 108 ஆம்புலன்ஸில் அப்பகுதியில் அவசரமா கடந்து செல்ல முடியாமலும் மற்றும் நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவ மணிகள் மற்றும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வெயிலிலும் மழையிலும் போக்குவரத்து காவலர்கள் அவ்வழியே செல்லும் பயணிகளின் கூட்ட நெருச்சலை கட்டுபடுத்த முடியாமல் திணறுகிறார்கள். ஆகையால் இந்த மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.