நாகர்கோவில், டிசம்பர் 4 –
திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடந்தது.
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் ஒன்றாகும். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில் திருக்கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருநாள் நேற்று (3ம் தேதி) கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும் திருக்கார்த்திகை திருநாளையொட்டி நேற்று காலை சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. காலையிலேயே பக்தர்கள் கோயில்களுக்கு வந்து வழிபாடு நடத்தினர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோயில், வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.
திரு திருக்கார்த்திகை திருநாளொட்டி வீடுகளிலும் நேற்று அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்றினாலும் கூட நேற்று திருக்கார்த்திகை திருநாளில் வீடுகள் முழுவதும் விளக்குகளால் அலங்கரித்து, பூஜைகள் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பனை ஓலை, திரளி இலை உள்ளிட்டவற்றில் கொழுக்கட்டை தயாரித்தும் வழிபாடு நடத்தினர். திருக்கார்த்திகை திருநாளையொட்டி நாகர்கோவில், வடசேரி, கோட்டார், உள்ளிட்ட இடங்களில் அகல் விளக்குகள் விற்பனை நடைபெற்றது. திரளி இலை, பனை ஓலைகளை கொழுக்கட்டை அமைப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மண் விளக்குகள் விற்பனையும் அமோகமாக நடந்தது.


