இரணியல், டிச. 10 –
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திங்கள் நகரில் அருள்மிகு ராதாகிருஷ்ணன் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோயிலில் காலை மாலை இரு வேளை பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணன் ஜெயந்தி சித்திரை மாதம் 1 ம் தேதி இங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்வது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல நடை சாத்தப்பட்டு இன்று காலை கோயில் ஊழியர்கள் நடை திறக்க வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேஜை டிராயர் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோயில் மேலாளர் ராஜசேகர் இடம் தகவல் அளித்தனர். அவர் இரணியல் காவல் நிலையத்தில் சுமார் ரூபாய் 25 ஆயிரம் திருடு போனதாக புகார் அளித்தார். இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் துறை அதிகாரிகள் வந்து கைரேகை பதிவு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ம் தேதி இதே கோயிலில் மர்ம நபர் புகுந்து உண்டியல் காணிக்கை பணம் திருடிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூறுகையில்: கடந்த ஏப்ரல் மாதம் 10 ம் தேதி திருட்டு சம்பவம் நடந்த பின்னர் சிசிடிவி கேமரா உபயமாக பொருத்த முயன்ற போது அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இப்போது மறுபடியும் திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அதிகாரிகள் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



