மார்த்தாண்டம், டிச. 23 –
குமரி மாவட்டம் வழியாக டாரஸ் லாரிகளில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. சராசரியாக 600 டாரஸ் லாரிகளுக்கு மேல் மாவட்டத்தை கடந்து செல்கிறது. இதனால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாரஸ் லாரிகள் செல்ல அனுமதி சீட்டு அளித்து பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திருட்டுத்தனமாக செல்லும் டாரஸ் லாரிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் டாரஸ் லாரிகள் அதிக அளவில் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து நேற்று களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வந்த 13 டாரஸ் லாரிகள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தீவிர படுத்தப்படு என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது சபரிமலை சீசன், கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரம் என்பதால் குமரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே இதை குறைக்கும் வகையில் பகலில் டாரஸ் லாரிகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட வேண்டும், பொங்கல் முடிந்தபின் வழக்கமான நேர நடைமுறையை கொண்டு வருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


