நாகர்கோவில், ஜன. 12 –
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா விளாத்துறை பஞ்சாயத்தின் குன்னத்தூர் சந்திப்பில் இந்திய அஞ்சல் துறை சார்பில் பொதுமக்களின் அத்தியாவசிய அஞ்சல் மற்றும் நிதி சேவைகளை எளிதில் பெறும் விதமாக 19/01/2026 அன்று விளாத்துறை என்கிற புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த புதிய கிளை மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு கடிதங்கள் மற்றும் பார்சல் சேவைகள், ஏ.இ.பி.ஸ் சேவைகள், குழந்தைகளுக்கான புதிய ஆதார் எடுப்பது மற்றும் சில குறிப்பிட்ட ஆதார் சேவைகள், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவை, அஞ்சலக சேமிப்பு திட்ட சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை விளாத்துறை/குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கிளை அஞ்சலகம் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு அஞ்சலக சேமிப்பு கணக்குகள், காப்பீட்டு திட்டங்கள் ஆகியவற்றை வீட்டிற்கே வந்து தொடங்கும் சேவைகள் விளாத்துறை/குன்னத்தூர் கிராம பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.
விளாத்துறை கிளை அஞ்சல் அலுவலகம் தொடங்கப்படுவது, குன்னத்தூர்/விளாத்துறை கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளும் எளிதாக கிடைக்கும்படி அமைந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.



