நாகர்கோவில், டிச. 17 –
குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இதை தடுக்க முக்கிய சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதை வரைமுறைப்படுத்த ஆங்காங்கே “நோ பார்க்கிங்” போர்டுகள் அமைத்து சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் மாவட்ட எஸ் பி யின் உத்தரவை மீறி லஞ்சம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு நோ பார்க்கிங் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அந்த நிறுவனங்களிடமிருந்து தொகை கணிசமாக மாத மாமூல் மற்றும் இலவச உணவு ஆகியவைகளை பெற்றுக்கொண்டு வாகனம் நிறுத்தங்களை அனுமதித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் நீதிமன்ற சாலையில் ஹோட்டல் முன்புறம் “நோ பார்க்கிங்” போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் தற்போதும் தொடர்ந்து அவ்வப்போது வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வது இல்லை.
அதேபோல ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதித்துள்ளது போக்குவரத்து போலீசார் மீது பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. நேற்று 17-ம் தேதி இது போன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
சாதாரண பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி செல்லும் வாகனங்களை கூட தங்களது டார்கெட் டுக்காக போக்குவரத்து போலீசார் புகைப்படம் எடுத்து ஏதாவது ஒரு அபராதம் விதித்து விடுவது குமரி மாவட்டத்தில் வாடிக்கையாக உள்ளது.
மாவட்ட காவல் நிலையங்களில் போலீசாரை “களை” எடுத்த மாவட்ட எஸ்பி குமரி மாவட்ட போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளையும் விசாரித்து வர்த்தக நிறுவனங்களின் முன்பு “நோ பார்க்கிங்” பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள விபரங்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் ஆராய்ந்து அப்பகுதிக்கு பொறுப்பான போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதோடு நேர்மையானவர்களை போக்குவரத்து போலீசாராக நியமித்து போக்குவரத்து காவல் பிரிவில் உள்ள கறுப்பு ஆடுகளை “களை” எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



