நாகர்கோவில், ஜன. 19 –
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு குமரி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக் தலைமை வகித்தார்.
குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏழை, எளிய மக்களின் துயரங்களை அறிந்து அவர்களின் கண்ணீரை துடைக்க வழி வகுத்து துயர்களை களைந்தவர். மக்களுக்கு நன்மை செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களால் தூக்கி எறியப்படுவார்கள். இது தான் வரலாறு.
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தற்போது 5 தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்துள்ளார்கள். அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை, ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து, அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், அம்மா இருசக்கர வாகனம் வாங்க 5 இலட்சம் மகளிருக்கு தலா ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று சிறப்பான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.
இந்த நன்மைகளை எல்லாம் எண்ணி மக்கள் அம்மாவின் நல்லாட்சி மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு ஏதுவாக ஒவ்வொரு வரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் பேசினார்.
இவ்விழாவில் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழகச் செயலாளர்கள், அகஸ்தீஸ்வரம் வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் 60 பேருக்கு எம்.ஜி.ஆர் விருதுகளையும், 300 பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வழங்கினார். இதனைத் தொடர்ந்து 1,500 பேருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சியினையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் நாஞ்சில் வின்சென்ட், மாநில வர்த்தக அணி செயலாளர் ராஜன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



