மார்த்தாண்டம், நவ. 18 –
குழித்துறை நகராட்சி ஆணையாளர் கொடுத்த பணிச்சுமை நெருக்கடி காரணமாக அலுவலக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் ஆணையாளர் சுபிதாஸ்ரீ கடந்த மாதம் 28ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த நகராட்சியில் ஆணையாளராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு ஊழியர்களுக்கு பல்வேறு நெருக்கடி கொடுப்பதாக ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
அலுவலக உதவியாளர் ஆனந்த் (30). இவர் சொந்த ஊர் தக்கலை. இவர் தனது மனைவி முத்து செல்வி மற்றும் 3 வயது பெண் குழந்தையோடு நகராட்சி அலுவலகம் அருகே கண்ணக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு நகராட்சி ஆணையர் சில நாட்களாக அதிக பணிசுமை நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்து உள்ளார்.
வீட்டில் சென்றவர் இன்று குளியல் அறையில் விஷம் குடித்து உள்ளார். இதை பார்த்த மனைவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரி கொடுத்த பணி சுமை காரணமாக மன அழுத்தம் காரணமாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



