மார்த்தாண்டம், அக். 28 –
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 போன்ற அணைகள் உள்ளது. இந்த மலையோர பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளது. இவற்றில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கோதையாறு, குற்றியாறு, சிற்றார் போன்ற பகுதிகளில் உள்ளது.
இதை தவிர கோதையாறில் இரண்டு நீர் மின் நிலையங்கள், மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு, அரசு பள்ளி போன்றவை உள்ளது. மலைகளின் உட்பகுதிகளில் ஏராளமான மலை குடியிருப்புகள் உள்ளது. அதோடு சூழியல் சுற்றுலா தலமாக இந்த பகுதி உள்ளது ஆகவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அதே போன்று யானைகளின் சொர்க்கபுரியாக மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இது பல்லுயிரி சரணாலயமாக இருந்தாலும், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் அரசு ரப்பர் கழகத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களில் முதிர்ந்த ரப்பர் மரங்கள் வெட்டப்பட்டு, புதிய ரப்பர் செடிகள் நடவு செய்யும்போது, ஊடு பயிர் செய்ய குத்தகைக்கு விடப்படுகிறது. ஊடுபயிராக அன்னாசி, வாழை, மரச் சீனி போன்றவை பயிரிடப்படுகிறது. இதனால் அடர்ந்த காடுகளில் சுற்றித் திரியும் யானைகள் இங்குள்ள ஊடுபயிர்களை விரும்பி உண்ணுகின்றன. இதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாகவும், ஒற்றையாகவும் அடர்ந்த காடுகள் இருந்து வெளியேறி, இந்த பகுதிகளை சுற்றி வருகிறது.
இந்த யானைகளால் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளது.
குடியிருப்பு பகுதிகளை சுற்றி வரும் இந்த யானை கூட்டங்கள் பயிர்களை மட்டும் இன்றி வீடுகளையும் சேதப்படுத்துகிறது. யானைகள் கூட்டம் இருக்கும் போது, பல நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் சூழல் உள்ளது. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், ரப்பர் பணிகள் முடங்கியுள்ளது. இந்த சூழலில் ஒற்றை யானை ஒன்று கோதையாறு பகுதியில் தற்போது ரப்பர் தோட்டங்களில் சுற்றி திரிகிறது. இந்த யானை நடமாட்டம் பொதுமக்கள் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



