குளச்சல், நவ. 24 –
குளச்சல் அருகே செம்பொன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விஜய் (31). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த வருடம் ஊருக்கு வந்த இவர் தற்போது குளச்சலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக உள்ளார்.
இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதி சேர்ந்த சுஜிதா (24) என்பவருக்கும் கடந்த 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சுஜிதா தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி விஜய் வேலைக்கு சென்று விட்டார். விஜய்யின் தாயார் தனது மகள் வழி பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் சுஜிதா மட்டும் தனியாக இருந்தார்.
பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வந்து பார்த்தபோது சுஜிதாவை காணவில்லை. வீடு திறந்து கிடந்தது. விஜய் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் உள்ள டேபிளில் சுஜிதா கழுத்தில் விஜய் கட்டி இருந்த ஏழு பலன் தாலி செயின் இருந்தது. தாலி செயினை கழற்றி வைத்துவிட்டு சுஜிதா சென்றது அதன் பின்பு தெரிய வந்தது.
இதற்கிடையே விஜய் செல்போன் நம்பருக்கு வாட்ஸ் அப் மெசேஜ் சுஜிதாவின் செல்போனில் வந்திருந்தது. அதில் என்னை தேட வேண்டாம். விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி என்னை திருமணம் செய்து வைத்துவிட்டனர். என்னை மன்னித்து விடுங்கள் என கூறப்பட்டிருந்தது.
விஜய் இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை தேடி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் சுஜிதா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்பொழுது சென்னைக்கு சென்று இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.



