கன்னியாகுமரி, டிச. 13 –
நாகர்கோவில், கணேசபுரம் பகுதியில் வசித்து வருவார் பொன்துரை (35). இவர் தனது அத்தை மகளான அன்னசுதா (31) என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அன்னசுதா வக்கீலாக உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்தின் போது ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் 150 பவுன் தங்க நகைகளும் ரூ. 5 லட்ச மதிப்பிலான சீர்வரிசை பொருள்களும் அன்ன சுதாவின் பெற்றோர் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பொன்துரை மற்றும் அவரது தந்தை சிவதாணு, சகோதரி உஷாதேவி மற்றும் அவரது கணவர் தினேஷ் ஆகியோர் சேர்ந்து அன்னசுதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் குழந்தை இல்லாத காரணத்தை சுட்டி காட்டி அன்ன சுதாவை தகாத வார்த்தைகளால் தினமும் திட்டி வந்துள்ளனர்.
சம்பவ தினம் அன்னசுதாவை கணவர், மாமனார் சிவதாணு, கணவரின் சகோதரி உஷாதேவி, அவர் கணவர் தினேஷ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து வீட்டிலிருந்து வெளியே தள்ளி துன்புறுத்தி உள்ளனர். சம்பவம் குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்ன சுதாவின் கணவர் உட்பட 4 பேர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


