நாகர்கோவில் மார்ச் 31
குமரி மாவட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து கட்சித் தொண்டர்களை அரவணைத்து கொண்டு சென்றவர் சுரேஷ் ராஜன் ஆவார். இவர் அமைச்சராக இருந்த போதும், இல்லாத போதும், உடன்பிறப்புகளுக்கு உற்ற உறுதுணையாக இருந்து கட்சியை வழிநடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சராக இருந்தபோது மற்ற கட்சியினர் திமுகவுக்கு எதிராக வரும்போது அதைக் கடுமையாக எதிர்த்து நின்றவர் இதனால் மற்ற கட்சியினர் சற்று வலுவிழந்தே காணப்பட்டனர். இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அண்மை காலமாக குமரி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் நிலை சற்று பரிதாபமாகவே இருந்து வருவதாகவே கூறப்படுகிறது. தற்போது ஆளுங்கட்சியாக இருந்து வரும் திமுகவின் நிகழ்ச்சிகளிலும், கழக உடன்பிறப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் ஒதுக்கப்பட்டு வேறு கட்சியை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது.
குமரி மாவட்டத்தை பொருத்த அளவில் திமுக 2021 தேர்தலுக்கு முன்பு இருந்த வலிமை மாவட்டச் செயலாளர் மாற்றத்திற்கு பின் சற்று பின்னோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதே நிலை தொடருமானால் குமரி மாவட்ட திமுக தனது பலத்தை வெகு விரைவில் இழந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் கட்சித் தொண்டர்களை அரவணைத்து அரன் போல் பாதுகாத்து வருகிறார். இவர் போன்றவர்கள் இல்லை என்றால் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சொன்னது போல் கட்சித் தலைமைக்கு குமரி ஒரு தொல்லையாகவே அமையும். அவ்வாறு அமைந்து விடக் கூடாது என்பதற்காக தான் பதவியில் இல்லை என்றாலும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களை இன்றும் அரவணைத்து தன்னால் இயன்றதை செய்து குமரி மாவட்ட திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருவதால் உண்மையான உடன்பிறப்புகள் அவரை சுற்றி வலம் வருவதாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன முன்னாள் அமைச்சர் விளக்கம் :-
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த டாக்டர் ஆல்பனின் 26-வது நினைவுநாள் பொதுக்கூட்டம் ஆற்றூர் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், “எனக்கு முன்பாக பேசிய விஜிலா சத்யானந்த், கட்சிக்காரர்கள் எல்லாம் சிதறிக்கிடக்கிறார்கள் என்று சொன்னார்கள். மேற்கு பகுதியைப் பற்றி எனக்கு தெரியவில்லை. கிழக்கு பகுதியை பொறுத்தமட்டில் ஒரு குரங்கு கையில் மாலையை கொடுத்தால் பூக்கள் எப்படி சிதறிப்போகுமோ அதுமாதிரிதான் கிழக்கு பகுதி இருக்கிறது. இதை தலைமை உணரும் என்று நான் எதிரார்த்துக் கொண்டிருக்கிறேன்” என பேசினார். சுரேஷ்ராஜன் பொது மேடையிலேயே இப்படி பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சுரேஷ்ராஜன் தி.மு.க தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்மீது போடப்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்கு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டம் குறித்து சுரேஷ்ராஜன் பேசியதுதான் விமர்சனத்துக்கு காரணமாக மாறியது. இதுபற்றி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் விளக்கம் கேட்டு பேசினோம், “வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது நம் தலைவரின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும். கிழக்கு மாவட்டத்தில் சிலர் பிரிந்து இருக்கிறார்கள். பொறுப்பு இல்லை என்று யாரும் ஒதுங்கி இருக்காதீர்கள். பிரிந்து இருப்பவர்கள் எல்லோரும் தேர்தலில் ஒன்றாக இருக்க வேண்டும். தி.மு.க குடும்பத்தில் நாம் ஒன்றாக இருந்து தேர்தல் வேலையை பார்க்க வேண்டும் எனபதற்கு எடுத்துக்காட்டுக்காக அந்த வார்த்தையை நான் சொன்னேன். எதிராளிகள் வேண்டும் என்றே அதை திசைதிருப்புகிறார்கள்” என்றார்.