காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 300 -கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆண்டுதோறும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வடமங்கலம் தனியார் கல்லூரி மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் மிருணாளினி, டி.எஸ்.பி., கீர்த்திவாசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பள்ளி பேருந்துகளில் ஏறி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேருந்துகளில் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா, அவசர கால கதவு முறையாக உள்ளதா, தீயணைப்பு கருவிகள் பராமரிக்கப்படுகிறதா, பிரேக் பிடிக்கிறதா, ரிவர்ஸ் கேமரா வேலை செய்கிறதா எனபது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும், திடீரென வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டால், ஓட்டுனர்கள் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீயணைப்பு துறை மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் பள்ளிப் பேருந்தை இயக்கி சோதனை மேற்கொண்டார். ஆய்வில், வேக கட்டுப்பாடு கருவி வேலை செய்யாத பேருந்து, ரிவர்ஸ் கேமரா, அவசரகால கதவு வேலை செய்யாத பேருந்துகள் நிராகரிக்கப்பட்டன.



