நாகர்கோவில் ஜூன் 12
அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வெள்ளமடத்தில் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட புதிய திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க ஆட்சியில், 19-03-2020 அன்று 2020-2021-ம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானிய விவாதத்தின் போது, அன்றைய கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் போது, ஆரல்வாய்மொழி, வெள்ளமடம், மைலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் வணிக வளாகம் மற்றும் திருமண மண்பங்கள் கட்டிட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின், கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதியிலிருந்து மேற்குறிப்பிட்ட சங்கங்களுக்கு முறையே ரூ. 50 இலட்சம், ரூ. 1 கோடி, ரூ. 80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் ஆரல்வாய்மொழியில் ரூ. 50 இலட்சத்தில் வணிக வளாகமும், மைலாடியில் ரூ. 80 இலட்சத்தில் திருமண மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.
தற்போது வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் சார்பில் ரூ. 1 கோடி மதிப்பில் வெள்ளமடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டப திறப்பு விழா வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஷேக் செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. இத்திருமண மண்டபத்தில் தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சகுந்தலா வரவேற்று பேசினார். நாகர்கோவில் சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சி.ச.முருகேசன் முன்னிலை வகித்தார். வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் ஆர்.சண்முக சுந்தர் நன்றி கூறினார்.
இவ்விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், வெள்ளமடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சஜிதா, தங்கப்பன், ராமசாமி, தர்மராஜன், நாகராணி, பிச்சம்மாள், பாபு, கழக நிர்வாகிகள் பிரபு, ரோகிணி அய்யப்பன், கடுக்கரை ஐயப்பன், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.