பரமக்குடி,மே.22 : ராமநாதபுரம் மாவட்ட விதைப்பரிசோதனை நிலையத்தில் பரி சோதிக்கப்படும் விதை மாதிரிகள் குறித்து வேளாண் அலுவலர் முருகேஸ்வரி கூறுகையில்”
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் விதைப்பரிசாதனை மேற்கொள்ள வசதியாக, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறை கட்டுப்பாட்டில் ராமநாதபுர மாவட்ட விதைப்பரிசோதனை நிலையம் பரமக்குடி ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக்கூட வளாகத்தில் செயல்பட்டுவருகிறது. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இந்த பரிசோதனை நிலையத்தில் ,மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தும் எல்லா வகையான பயிர்களின் விதைகளும் பரிசோதனை செய்யப்பட்டு ,சான்றளிக்கப்பட்டு வருகிறது . விவசாயிகள்,விதை விற்பனை நிலையங்களில் இருந்து கொண்டுவரப்படும் விதைகளை நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, எள், காய்கறி மற்றும் கீரை உள்ளிட்ட எல்லா வகையான விதைகளும் பரிசோதனை செய்யப்பட்டு, அவற்றின் தரத்தை தீர்மானிக்கக்கூடிய காரணிகளான முளைப்புத்திறன் பரிசோதனை ,ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் வழங்கி வருகிறோம்.
இங்கு விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் சான்று விதை மாதிரிகள் விதை விற்பனை நிலையங்களில் இருந்து பரிசோதனைக்கு எடுக்கப்படும் ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பணிவிதை மாதிரிகள் விதை பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டுவருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 5447 விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 470 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்விதை குவியல்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கு முன்பு தடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் பயன்படுத்த உள்ள விதைகளை விதை பரிசோதனை நிலையத்தில் ரூ .80/- கட்டணமாக செலுத்தி விதை தரத்தினை உறுதிப்படுத்தி விதைப்பு செய்து விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.



