நீலகிரி. மார்.05
மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய தொழிலாக விவசாயமே பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் அதிகமாக பயிரிடப்படுகிறது. தேயிலைக்கு நிலையான விலை கிடைக்காத நிலையில் தேயிலை தோட்டங்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறி வருகின்றன. காய்கறி தோட்டங்களிலும் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சரியான பகுதிகளில் பல சிறு குறு விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். சரிவான பகுதி என்பதால் திட்டமிடப்பட்ட சாலை வசதிகள் கிடையாது இருப்பினும் ஒரு சில விவசாயி தனது நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் மற்ற விவசாயிகளின் விலை நிலங்களின் வழியாகத்தான் சென்றுவர வேண்டும் அவர்களுக்குள் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்பட்டதில்லை இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விளைநிலங்களை வாங்கும் பணக்காரர்கள் அங்கு வானுயர்ந்த கட்டிடங்களை கட்டி வருகின்றனர். அதனை சுற்றி மின் வேலிகள் அமைத்தும் வனவிலங்குகளை தொந்தரவு செய்தும் வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்ற நிலையில் மலை காய்கறிகள் தமிழக முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படுகின்ற மலை காய்கறிகள் தமிழகம் மட்டும் இன்றி மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. மலை மாவட்டத்தில் விவசாய தோட்டங்கள் கட்டிடம் கட்டுவதற்காக படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதால் இங்கு முக்கிய உயிர்நாடியான விவசாய தொழில் முற்றிலுமாக பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத் தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படும் மரங்களும் அதிகமாக வெட்டப்படுவதால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுகின்ற அபாயம் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது. தேயிலை மற்றும் மலை காய்கறி விலை நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு கட்டிடங்கள் உருவாவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூரை சேர்ந்த ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு கூட அனுமதி வாங்குவது மிகவும் சிரமமான சூழ்நிலையாக உள்ளது. அனுமதி கோரி விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தேயிலை தோட்டங்களில் காட்டேஜ்கள், பங்களா கட்டும் பணம் படைத்தவர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி அரசின் அனுமதி பெற்று கட்டிடங்களை கட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் நிலங்களில் கட்டிடம் கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீலகிரி மாவட்ட விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். மாவட்டத்திலுள்ள பல விவசாய நிலங்கள் கனரக ஜேசிபி எந்திரங்களை கொண்டு மண்ணை அள்ளுவதும், பாறைகளை உடைப்பதும், அந்தப் பகுதியில் உள்ள மரங்களை அழிப்பதும் போன்ற அபாயகரமான செயல்கள் நடந்தேறி வருவதை கண்கூடாக உள்ளது. பணம் படைத்தவர்கள் பெரிய பெரிய காட்டேஜ்கள் பங்களாக்கள் கட்டுவதற்கு வீடு கட்டுவதற்கு என்று அனுமதியை வேளாண்துறை மூலம் பெற்று மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றி முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதி அதிகம் நிறைந்த உயிர் சூழல் மண்டலமான நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமான கட்டிடங்கள் விவசாய நிலங்களை அழித்தே கட்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது மலை மாவட்டத்தில் விவசாய நடக்கிறதே இல்லையோ ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. 1993 கட்டிட விதிகளின்படி விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டபட்டுள்ளன. மேலும் 1997/3(1)ஐ மீறி அரசின் அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. காய்கறி தோட்டம் மற்றும் தேயிலை தோட்டங்களில் கட்டிடம் கட்டப்பட்டு அதன் அருகிலேயே போர்வெல் கிணறு அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருங்காலங்களில் குடிக்ககூட தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கப்படும் சில்வர் மரங்கள் விவசாய தேவைகளுக்காக வெட்டிக் கொள்ளலாம் என்ற அரசின் அனுமதியால் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு மர வியாபாரிகள் வாங்கி தேயிலை தோட்டங்களில் வளர்ந்த மரங்கள் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டு வருவதால் மாவட்ட காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் மரங்கள் அழிவால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நீலகிரி மாவட்டம் மட்டுமல்ல சமவெளி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்து. கீழே கொடுக்கப்பட்டுள்ள அழிக்கப்படும் தேயிலைத் தோட்ட புள்ளி விவரங்களைப் போல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு உள்ள காய்கறி தோட்டங்களும் அளிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடான உண்மை. எனவே நீலகிரி மாவட்ட நிர்வாகம் மாவட்ட சுற்றுச்சூழலின் அவசியத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.