நாகர்கோவில் ஜூலை 6
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக 2 வது முறையாக பொறுப்பேற்று விட்டு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த விஜய் வசந்த் எம்.பி-க்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பா்ட், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் அம்பிளி, லூயிஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பாபு உள்ளிட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் வந்தடைந்த அவருக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன், சகாய பிரவீன் உள்ளிட்டோா் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனா். அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வது முறையாக மக்களுக்கு சேவை செய்திட வாய்ப்பு அளித்த அனைத்து கட்சி தலைவா்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், எனக்காக பிரசாரம் செய்த இந்தியா கூட்டணி தலைவா்களுக்கும் நன்றி. ஏற்கெனவே எனது தந்தை விட்டு சென்ற மக்கள் நலப் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பணிகள் தொடா்ந்திட எனக்கு மீண்டும் வாக்களித்துள்ளீா்கள். முதல் கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க மத்திய அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து ரூ.13 கோடி ஒதுக்கீடு பெற்று வந்துள்ளேன். இம்மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழு மூச்சாக பாடுபடுவேன். மக்கள் தங்களது குறைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா்.