போகலூர், பிப்.27-
போகலூர் வட்டாரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தில் முதலூர், பொட்டிதட்டி கிராமங்களில் நிலக்கடலை GJG 32 சான்று விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு 10 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு விதை பண்ணையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலூர் விவசாயிகள் ஜெயலட்சுமி, ராமச்சந்திரன், இளங்கதிர் மற்றும் நாக பூபதி ஆகியோரது அறுவடை நிலையில் உள்ள நிலக்கடலை செயல் விளக்கத்திடலை போகலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இராஜேந்திரன் ஆய்வு செய்து விவசாயிகளிடம் GJG-32 நிலக்கடலை 110 நாட்கள் வயது உடையது, 50 சதம் எண்ணெய் சத்து உள்ளது. ஏக்கருக்கு ஒரு டன் மகசூல் தரக்கூடியது எனவும் இதில் கிடைக்கக்கூடிய நிலக்கடலை விதையினை சுத்தம் செய்து காய வைத்து வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து கொடுக்கப்படும் 35 கிலோ கொள்ளளவு கொண்ட கோணி சாக்கில் பிடித்து வைக்க வேண்டும். இந்த விதையிலிருந்து முளைப்புத்திறன் பரிசோதனை செய்ய விதைச்சான்று அலுவலரால் விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையம் பரமக்குடிக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனை நிலையத்தில் தேர்ச்சி பெற்ற பின்னர் இவ்விதையினை பிற விவசாயிகளுக்கு சான்று விதைகளாக விநியோகம் செய்யப்படும் என ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் பொழுது துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர், உதவி விதை அலுவலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.



