திருப்பூர், ஆக. 9:
கைத்தறி ஆடைகளை வாங்கி அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் கைத்தறி தின விழாவில் கூறினார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.
இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-
தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கதர்கிராம தொழில்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை பார்வையிட்டு விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோர காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம் துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும், தனித்துவத்துடனும் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேற்படி கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி ஆடைகள் உள்ளிட்ட ரகங்களை பெருமளவில் வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கைத்தறி துறையின் சார்பில் 17 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்ட ஆணையினையும் 3 கைத்தறி நெசவாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெசவாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 வீதம் 10 நெசவாளர்களுக்கு ரூ.5.00 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 உறுப்பினர்களுக்கு ரூ.6.36 லட்சம் மதிப்பிலான திட்டத்தொகையினையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த விழாவில் திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன். கதர்துறை உதவி இயக்குநர் எஸ்.சுரேஷ், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ஜெகநாதன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.