கோயில் குருநாதர் மோகன் சுவாமி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்
போகலூர், நவ.16-
தென்னகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் கார்த்திகை முதல் நாள் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாள்(16-11-2024) சபரிமலை ஶ்ரீ ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். இந்நிகழ்ச்சிக்காக ரெகுநாதபுரம் ஶ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று அதிகாலை 4:15 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 5 மணிக்கு அஸ்டாபிஷேகம் அலங்காரம்,6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் ஶ்ரீவல்லபை ஐயப்பனுக்கு மாலை அணிந்து, கன்னி சுவாமிக்கு மாலை அணிவித்து பின்னர் மற்ற சுவாமிமார்களுக்கு ஆலய குருநாதர் ஶ்ரீ ஆர்.எஸ்.மோகன் சுவாமி மாலை அணிவித்தார்.
இந்நிகழ்வில் ரெகுநாதபுரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் அனைத்து பகுதிகளிலும் இருந்து சுவாமிமார்கள் வருகை தந்து இவ்வாலயத்தில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இந்த ஆலயத்தில் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் சுவாமிமார்கள் புகைப்பழக்கம் மற்றும் லாஹிரி வஸ்த்துக்கள் உபயோகிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஆரம்பத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வாலயத்தில் கார்த்திகை 1-ஆம் தேதியில் இருந்து சபரிமலை யாத்திரை முடியும் வரை தினசரி பகல் அன்னதானம் மற்றும் இரவு அன்னதானம் வழங்கப்படும். தினசரி அதிகாலை மற்றும் மாலை வேளையில் சிறப்பு பஜனை நடைபெறும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மதியம் பஜனை,கூட்டுப் பிரார்த்தனை மற்றும் மஹா அன்னதானம் நடைபெறும்.