ஈரோடு ஜூலை 21
ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் தேசிய சிறார் நலத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்களிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஏற்படும் குறைபாடுகள் உட்பட வளர்ச்சி தாமதங்கள். 4 டி (4D-ல் 30 நோய்களை முழுமையாக உள்ளடக்கியது) வகைகளாக வகைப்படுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில் 4 வயது குழந்தைக்கு எப்ஸ்டீன் அனாமலி என்ற அரியவகை பிறவி இருதய குறைபாடு நோய் மருத்துவக் குழுவினரால் கண்டறியப்பட்டது. அக்குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் டி என் எச் எஸ் பி திட்டத்திலிருந்து சிறப்பு அனுமதி பெற்று மூன்று தினங்களுக்குள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையும் பெறப்பட்டு, உயிர் காக்கும் அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தற்சமயம் அக்குழந்தை நலமாக உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில், பிறப்பு இதய குறைபாடுள்ள 1599 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட 503 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் உள்ளார்கள். மீதம் உள்ள 1096 குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பிறவி காது கேளாமை உள்ள 142 குழந்தைகள் கண்டறியப்பட்டு 56 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும் மீதம் உள்ள 66 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.
பிறவி கண்புரை கண்டறியப்பட்ட 29 குழந்தைகளுக்கு
கண்புரை அறுவை சிகிச்சையும். உதடு மற்றும் அன்னப் பிளவு உள்ள 153 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன்
உள்ளார்கள். மேலும் நரம்பு குழாய் குறைபாடு உள்ள 21
குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து உள்ளார்கள். பிறவி
வளை பாத நோய் உள்ள 249 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு 49
குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும், 200 குழந்தைகளுக்கு மாவுக்கட்டு போட்டும் சரி செய்யப்பட்டுள்ளது.