கரூர் – செப் – 6
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று உணவு முறைகள் மற்றும் நோய் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு முறைகள் மற்றும் நோய் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் தெரிவித்தது, தேசிய ஊட்டச்சத்து மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிப்பதில் ஊட்டச்சத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதம் இதுவாகும்.
இந்த மாதம் முழுவதும் பல்வேறு கருப்பொருட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவு முறைகள் மற்றும் நோய் விழிப்புணர்வு கண்காட்சியும் மற்றும் இலவச ஊட்டச்சத்து ஆலோசனை மையமும் தொடங்கி வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து ஆலோசனை மையத்தில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்ய பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்க வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.
மேலும், கண்காட்சியில் பாரம்பரிய உணவு பண்டங்கள் மற்றும் மனித உறுப்புகளின் செயல்பாடுகளின் செயல் மாதிரிகள் குறித்தும், மனித உறுப்புகளின் செயல்பாடுகளை உயிரோட்டமாக காட்சியகப்படுத்தி இம்மாதிரிகளின் வாயிலாக நாம் பின்பற்றக்கூடிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றியும் அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார். இக்கண்காட்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில் பயிலும் மாணவர்களுக்கு இடையே காய்கனிகளின் சிற்ப வேலைப்பாடு, தீ மற்றும் தீ இல்லா சமையல் என்ற தலைப்பில் உணவுகள் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டு, அதில் மாணவர்கள் செய்த காய்கனிகளின் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் சார்பில் ஊட்டச்சத்து குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் சுவாதி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை தலைவர் ஜாகிர் உசைன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.