திருவட்டார். மார் – 7
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (65). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மகன் ஜான் சுந்தர் சிங் (42). கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் தனது தாய் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
தந்தைக்கும் மகனுக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் ரெண்டு பேரும் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வீட்டில் இரண்டு பேரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜான் சுந்தர்சிங் தாயார் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் போதையில் இருந்த தந்தைக்கும் மகனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் வீட்டிலிருந்த மரக்கட்டையால் மகன் ஜான் சுந்தர் சிங்கை தாக்கினார். அடி வாங்கியதும் வீட்டுக்குள்ளே சுற்றி ஓடிய சுந்தர் சிங் கையில் கத்தி கிடைத்தது. அதை வைத்து ஜான்சனை சரமாரியாக குத்தினார். மாறி மாறி தாக்கி கொண்டதால் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து இரண்டு பேரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.