கரூர் மாவட்டம் செப்டம்பர் -2
தோகைமலை, குளித்தலை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும்
குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு..
தோகைமலை, குளித்தலை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம் பாளையம், புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்கனவே மனு கொடுத்து இருந்த விவசாயிகளும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இனாம் நிலங்கள் தொடர்பாக பங்கேற்ற விவசாயிகள் பிரச்சனை குறித்து முதலில் பேச அனுமதித்தனர். அப்போது ,இனாம் நிலங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக விரைவில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பதாக கலெக்டர் தெரிவித்தார். இதனையடுத்து இனாம் நிலங்கள் தொடர்பாக மனு அளிக்க வந்த விவசாயிகள், கலெக்டரிடம் மனு அளித்து கூட்டத்திலிருந்து வெளியேறினர். பின்னர் ஏற்கனவே மன அளித்திருந்த விவசாயிகள், அதிகாரிகள் அமர்ந்தவுடன் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
இதில் காவிரி- வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் முருகேசன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது..
தோகைமலை ஒன்றியத்தில் உள்ள வடசேரி பெரிய ஏரி, ஆர்.டி.மலை காப்பேரி, புழுதேரி பெரியகுளம், பில்லூர் பெரியகுளம், கார்ணாம் பட்டி குளம், பாதிரிபட்டி குளம், கல்லடைகுளம், கீழவெளியூர் குளம் புத்தூர் ஏரி, தோகைமலை பெரியகுளம், நாகனூர் குளம், கூடலூர் ஏரி மற்றும் குளித்தலை ஒன்றியத்தில் நல்லூர் ஏரி, பாப்பக்காபட்டி ஏரி, உள்ளிட்ட ஏரி குளங்கள் அனைத்துமே மழை நீரை நம்பி உள்ளன.
இந்த ஏரி, குளங்கள் அனைத்தும் மேட்டுப்பகுதியில் உள்ளது.
காவிரி- வைகை -குண்டாறு இணைப்பில் இருந்து எங்கள் பகுதிகளுக்கு ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்ப முடியாது என பொதுப்பணி துறையினர் சொல்லிவிட்டார்கள். ஆனால் மின்மோட்டார் மூலம் நீர் நிரப்ப வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள். எங்கள் பகுதிகளுக்கு காவிரியில் இருந்து ராட்சத மின் மோட்டார் குழாய் மூலம் உபரி நீர் ஏற்றி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது..
க. பரமத்தி ஒன்றியம், ஆத்துப்பாளையம் அணையில் இருந்த வருடம் நீர் நிரம்பியுள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிலையில் கிளை வாய்க்காலில் அதிகம் மண் மூடி இருப்பதால், பாசனம் செய்வதற்கு நீர் போக்குவரத்து சரியில்லாமல் போகும் நிலை உள்ளது. எனவே துக்காட்சி, அத்திப்பாளையம், முன்னூர்,குப்பம் ஊராட்சி பகுதிகளில் மற்றும் கடைமடை பகுதி வரை வாய்க்காலில் உள்ள மண்ணை எடுப்பதற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் பணிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் 135 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும் 8 விவசாயிகளுக்கு ரூ.26 லட்சத்து 89 ஆயிரத்து 710 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி, வேளாண்மை பொறியியல் துறையினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புதுமையான வேளாண்மை கருவிகளின் கண்காட்சியினை கலெக்டர் மீ.தங்கவேல், அரவக்குறிச்சி எம். எல் .ஏ. இளங்கோ ஆகியோர் பார்வையிட்டனர்.