கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான பாரூர், அரசம்பட்டி, பண்ணந்தூர், சின்னப்பாரவூர் ஓடமங்கலம், புலியூர், ஜம்புகுட்டப்பட்டி புங்கம் பட்டி செல்லக்குடப்பட்டி மற்றும் தென்பெண்ணை ஆற்று படுகைகளி்ல் 2-ம் போக நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி. அணை மூலம் 9,012 ஏக்கர் பரப்பளவும் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போகப் பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போகப் பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் அறுவடை முடித்த விவசாயிகள் மழை மற்றும் அணைகளின் நீர் திறப்பை நம்பி எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பாரூர் ஏரியிலிருந்து 2-ம் போகப் பாசனத்துக்காக கடந்த டிசம்பர் 13-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் மூலம் நேரடியாக 2397 ஏக்கர் பரப்பளவும், மறைமுகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவும் பயன்பெறுகிறது. தற்போது, விவசாயிகள் நெல் நடவு, நிலத்தைச் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாமல் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், 2-ம் போக நெல் சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ள காரணத்தால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 1000 ஏக்கருக்கும் மேல் கூடுதலாக சாகுபடி செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.