தேனி.
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, தென்னையில் அதிகமாக சேதம் விளைவிக்கும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ மற்றும் சிவப்பு கூன் வண்டு கட்டுப்பாடு குறித்து செயல் விளக்கமும், மா பயிரில் இந்தாண்டு ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கான காரணம் மற்றும் இனி வரும் காலங்களில் மகசூல் இழப்பீட்டினை குறைத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு வழிமுறைகள் குறித்தும் தோட்டக்கலை கல்லூரி பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது. மேலும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட இனங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது.
எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களாக வழங்கலாம்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, தெரிவித்துள்ளார்.