சின்னத்துறையில் கண் பரிசோதனை முகாம் தென்தாமரைகுளம்., பிப். 25. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை மற்றும் மார்த்தாண்டம் ஒருங்கிணைந்த வளர்ச்சி சங்கம் மற்றும் டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் பரிசோதனை முகாம் சின்னத்துறை, செயின்ட் ஜூட் ஆலய வளாகத்தில் நடந்தது. இந்தநிகழ்ச்சியில் செயின்ட் ஜூட்ஸ் சபை அருட்தந்தை ஜிபு தலைமை தாங்கி, கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்து பேசுகையில் கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் இம்முகாமில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ஷீபா மோள் கலந்து கொண்டு கண் பரிசோதனை குறித்த சிறப்புகளை விளக்கினார். இம்முகாமில் டாக்டர் சுரேஷ் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் அனிஷா கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தார். 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு பயன் அடைந்தனர். மேலும் இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இம்முகாமை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவர் சிவபாலன் ஒருங்கிணைத்திருந்தார். இந்த இலவச கண் பரிசோதனை முகாம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.



