நாகர்கோவில், ஜன. 7 –
சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 10. 12. 2025 அன்று இ ஃபைலிங் முறையை கட்டாயமாக்கி அறிவித்தது. இந்த முறையில் ஒரே நேரத்தில் அதிகமாக மனு தாக்கல் செய்யும்போது சர்வர் பிரச்சினை ஏற்படும். குறிப்பாக வழக்காடிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் பெட்டிஷன் போடுவதில் கால தாமதமாகி அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தகுந்த ஏற்பாடுகள் செய்யும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து நடத்தியது.
இந்த நிலையில் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாக் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தனர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது. இது குறித்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான அசோக் பத்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாக் அமைப்புப்புடன் நடத்திய ஆலோசனையின் முடிவில் 10. 12. 2025 தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பினை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை 9ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை தொடரலாம்.
கடந்த ஒரு மாதம் நடந்த போராட்டத்தில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டது இந்த வெற்றிக்கு காரணம். எனவே நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு சார்பில் சங்கத்தின் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


