கன்னியாகுமரி ஜூன் 7
கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் ,தெற்கு குண்டல் ,கலைஞர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை சுமார் 6 மணி துவங்கி 6:15 மணிக்குள் மூன்று முதல் நான்கு வினாடிகள் வரை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது .
இதனால் வீடுகளில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிறிது நேரம் வீடு அசைவது போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து டி.வி ,வாஷிங் மெஷின் ,பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சில விநாடிகள் அசைந்துள்ளது.ஆனால் பொருட்கள் ஏதும் கீழே விழவில்லை என தெரிகிறது.
லேசான நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அப்பகுதி மக்கள் பதட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள உறவினர்கள்,நண்பர்களுக்கு போன் செய்து நில அதிர்வு குறித்து பேசியுள்ளனர்.
அப்போது அந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நில அதிர்வு ஏற்பட்டது உறுதியாக தெரிந்தது.இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 2 மணி நேரம் வரை பதட்டமான சூழலில் இருந்தனர். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சிவ சுடலை மணி கூறியதாவது..
நேற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் எனது வாக்குக்கு உட்பட்ட வடக்கு குண்டல் தெற்கு குண்டல் ஆகிய பகுதிகளில் திடீரென ஒரு நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டிலிருந்து லேசான சில பொருட்கள் குலுங்கின. நான் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது தெருவில் இருந்த அனைவரும் லேசான நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கவுன்சிலர் என்ற முறையில் தகவல் தெரிவித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்