ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டம்
கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கண்டன உரை!
ராமநாதபுரம், ஆக.18-
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு டாக்டர்கள் சங்கம், பயிற்சி டாக்டர்கள், மருத்துவம் பயிலும் மாணவர்கள் மாணவிகள் சேர்ந்து
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டதாரி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரியும் தேசிய மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டியும்
நாடு தழுவிய தர்ணா அறப்போராட்டம் (அவசரமில்லா சேவை புறக்கணிப்பு) நடந்தது.
கொல்கத்தா ஆர் ஜீ கர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முதுகலை பட்டதாரி பெண் மருத்துவரின் கொலைக்கு நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ மாணவிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கம் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து நாடு தருவிய தர்ணா போராட்டத்தை நடத்தினர். தர்ணா போராட்டத்தில் முதுகலை பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். மருத்துவ பணி செய்யும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க வேண்டும் தேசிய மருத்துவ பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் ராமநாதபுரம் கிளை தலைவர் டாக்டர் அரவிந்தராஜ் அரசு மருத்துவர்கள் சங்கம் தலைவர் டாக்டர் மலையரசு ஆகியோர் தலைமை வகித்து கண்டன உரை ஆற்றினார். இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, கௌரவ செயலாளர் டாக்டர் ஜோசப் ராஜன், நிதி செயலாளர் டாக்டர் அறிவழகன், அரசு டாக்டர்கள் சங்கம் செயலாளர் டாக்டர் சிவக்குமார், பொருளாளர் டாக்டர் கிருபாகரன், டாக்டர் முத்தரசன், பல்வேறு சிறப்பு டாக்டர்கள் மருத்துவம் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை எழுப்பினர்.