அஞ்சுகிராமம் மார்ச்-13
குமரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துறைகள் மூலம் நிதி ஒதுக்கபட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் பின் அவை சிறிதுகாலம் பயன்படுத்தப்பட்டு பின்னர் அக்கட்டிடங்கள் செயல்பாடற்று அப்படியே விடப்பட்டு உள்ளது.இவ்வாறு கைவிடப்பட்ட கட்டிடங்கள் பராமரிப்பின்றி பாழாகி
பழுதாகி பின்னர் உருக்குலைந்து போகும் நிலையில் ஏராளமான கட்டிடங்கள் உள்|ளன. இதனால் அரசு பணம் விரயமாவதுடன் மக்களும் பயன்படுத்தாமல் இவை காட்சிப் பொருளாக காட்சி அளிக்கின்றன.
இதன்படி தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், மற்றும் குமரி மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும்
பல்வேறு துறைகள் மூலம் கட்டபட்ட கட்டிடங்கள்,எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்கள் நிதியில் கட்டபட்ட கட்டடங்கள் இதுபோல் பயனற்று, பழுதடைந்து, கவனிப்பாரன்று கிடக்கின்றன. கைத்தறித் துறை சார்பில் மயிலாடி கைத்தறி கூடம்,தாழக்குடி பேரூராட்சி மீனமங்கலம்,தெள்ளாந்தி ஊராட்சி முடங்கன் விளை, இறச்சகுளம் ஊராட்சி பேச்சான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவு கூடங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், அரசு அதிகாரிகள் குடியிருப்பு, அலுவலகங்கள் என அரசின் பல லட்ச ரூபாய் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டது. தற்போது கைத்தறி தொழிலாளர்களின் பயன்படுத்தாத நிலையில் இக்கட்டிடங்கள் உருக்குலைந்து அந்திம காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
தாழக்குடி பகுதியில் உள்ள நெசவு கூடம் 15 கைத்தறி நெசவாளர்கள் பயன்படுத்திடும் வகையில் கைத்தறி ஏற்றுமதி மண்டல திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் மூலம் 2007.08 ஆண்டில் ரூ 3.12 லட்சம் மேம்படுத்தப்பட்டது. அதன்பின் இங்குள்ள தறி மற்றும் தளவாட பொருட்கள் அகற்றப்பட்டு தற்போது வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. அது போல் அஞ்சுகிராமம் மெயின்ரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நிதியில் தபால் நிலையம் அமைக்க கட்டடம் தற்போது வாகனங்கள் நிறுத்தமிடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.
இத்தகைய கட்டிடங்கள் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கமும் இங்கு நிறைவேறாமல், மக்களும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் யாருக்கும் பயனின்றி அழியும் நிலையில் உள்ள இக்கட்டிடங்களை காக்கவும்,மக்களின் பணம் விரயம் ஆவதை தடுக்கவும் இவற்றை மக்களுக்கான பல்வேறு திட்டப்பணிகளை நிறைவேற்றிடும் வகையில் இவற்றை மக்களிடமே ஒப்படைத்திட வேண்டும் என பொறியாளரும், குமரி மாவட்ட தேமுதிக பொருளாளருமான அஞ்சுகிராமம் முத்துக்குமார் கூறினார்.