நாகர்கோவில், அக். 21 –
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவில் நாகர்கோவில் நகரமே புகை மூட்டமாக காட்சி அளித்தது.
நாகர்கோவில் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டதால் காலையில் பட்டாசுகள் வெடிப்பது குறைந்திருந்தது. இதனால் பொதுமக்கள் மாலை முதல் இரவு வரை பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகளை உற்சாகமாக வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். கடந்த 3 நாட்களாக மழை பெய்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டதால் பட்டாசு வெடித்து வெளிவரும் புகையானது மேல் நோக்கி செல்லாமல் அதிக புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
இதனால் பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கடுமையான பனி மூட்டம் இருப்பது போன்று பட்டாசு வெடித்து அதிலிருந்து வெளிவரும் நச்சு புகையானது எல்லா இடங்களிலும் சூழ்ந்து எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு புலப்படாத வகையில் காற்றினுடைய மாசு அதிகரித்து காணப்பட்டது. வழக்கத்தை விட ஒரே நாளில் 15 சதவீதத்திற்கு மேலாக மாசு ஏற்பட்டதால் காற்று மாசடைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஒரு சில தரம் இல்லாத பட்டாசுகளில் இருந்து அதிகபுகை வெளியேறுவதால் காற்று மாசடைவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.



