தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வ பெருந்தகை குறித்து அவதூறு பரப்புகின்ற வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக மாவட்ட தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கொடும்பாவி எரிப்பதற்கான உருவப் பொம்மையை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரின் காரில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் காரில் இருந்த அண்ணாமலையின் உருவப் பொம்மையை பறித்து சென்றனர் .பஸ் மறியலில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், முஸ்தபா, பெருமாள், ஈஸ்வரன்,நகர் மன்ற உறுப்பினர்கள் ரஃபிக், பூமாதேவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்து கீழப்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர் இச் சம்பவத்தால் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



