தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய குடும்பங்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுக்கா பகுதியில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு நடத்தினார். காரிமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தகுதி உள்ள குடும்பங்களுக்கு விடுபடாத வகையில் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பேகார
அள்ளி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது கிராம மக்களிடம் கோரிக்கைகளை கேட்ட றிந்தார். இதைத் தொடர்ந்து அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை குறித்து ஆய்வு நடத்தினார். அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீர் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை பார்வையிட்டார். அப்போது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்ய வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இருக்கிறதா? என்பதை குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.