திருப்பத்தூர்:டிச:29,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் க. மோகன் காந்தி, காணி நிலம் மு.முனிசாமி, திருப்பத்தூர் ரோட்டரி சங்க தலைவர் Rtn PHF.G. வெங்கடேசன், மின்சாரத்துறை செயற்பொறியாளர் P. அருண் பாண்டியன், பள்ளிக்கல்வித்துறை திட்ட அலுவலர் பிரபாகரன், கொத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்குமார், நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இரண்டு நடுகற்களை கண்டெடுத்தனர்.
நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கொத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு நாள் சிறப்பு முகாமிற்காக தங்கி சேவையாற்றுகின்றனர். நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறப்புகளோடு தொல்லியல் அறிவையும் அறியும் விதமாக பெருமாள் வெங்கடேசன் ஆகியோர் நிலத்தில் இருந்த இரண்டு நடு கற்களை சென்னகேசவன் துணையோடு முனிவர் க.மோகன் காந்தி தலைமையில் குழுவாகச் சென்று ஆராய்ச்சி செய்தனர்.
இதுகுறித்து முனைவர் க.மோகன் காந்தி கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தில் காளிக்கானுர் வட்டத்தில் போட்றாமலை அடிவாரத்தில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நடு கற்களை எங்கள் ஆய்வுக் குழு கண்டெடுத்துள்ளது.
வழவழப்பான பலகைக் கற்களில் இரண்டு நடு கற்கள் புடைப்புச் சிற்பங்களால் காட்சி தருகின்றன. முதல் நடுதல் 4.5 அடி அகலமும் 6 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது கையில் நீண்ட வாளும், இடைப்பகுதியில் குறு வாளும், இடது கையில் வில்லும், காதுகளில் குண்டலமும், வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையோடும் நடுகல் வீரன் காட்சி தருகிறான். தொடை, மார்பு ஆகிய பகுதிகளில் அம்பு தைத்துள்ளது சிற்பத்தில் வெளிப்படுகிறது. நடுகல் வீரனின் வலது காலின் ஓரத்தில் ஒரு பெண் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நடுகல்லானது 4 அடி அகலமும் 5 அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான பலகை கல்லில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு நடு கற்களும் ஒரே மாதிரியாகவே செதுக்கப்பட்டுள்ளன. இவ்விரு நடுகல் வீரர்களும் இனக்குழு தலைவர்களாக இருக்க வேண்டும்.
கொத்தூர் பகுதியில் நடைபெற்ற பெரிய போரில் இருவரும் இறந்துள்ளனர். வீரர்கள் இறந்தவுடன் அவர்களின் மனைவியரும் அவர்களோடு உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை விட்டுள்ளதை இந்த நடு கற்கள் பறைசாற்றுகின்றன.
கொத்தூர் பகுதி அடர்ந்த வனப் பகுதிகளைக் கொண்ட காடுகள் சார்ந்த முல்லை நிலப்பகுதியாக நிலவியல் அடிப்படையில் காட்சித் தருகிறது. முல்லை நிலம் என்பது ஆநிரை வளர்ப்பிற்கு ஏற்ற இடம் ஆகும். இப்பகுதி மக்கள் ஏராளமான ஆடு, மாடுகளை வளர்த்திருந்திருப்பர். ஒரு காலத்தில் ஒருவருடைய செல்வம் என்பது மாடுகளையே குறிக்கும் மிகுதியான மாடுகள் உள்ள ஊரில் கல்வர்கள் மாடுகளை திருடுவது வழக்கம். அவ்வாறு திருடப்பட்ட தங்கள் மாடுகளை கள்வர்களிடம் இருந்து மீட்டு உயிர்விட்ட வீர மறவர்களாக இவ்விரு நடுகள் வீரர்களும் இருக்கலாம் ஆநிரை கவர்தல்- மீட்டல் போரை சங்க நூல்கள் வெச்சி கரந்தைப் போர் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
மேலும் கொத்தூர் பகுதியில் இருந்து ஆந்திர எல்லைப் பகுதி வெறும் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஒரு வேலை வேற்று மொழி பேசுபவரோடு ஏற்பட்ட எல்லைப் போரில் ஊரைக் காத்து வீர மரணம் அடைந்த வீரர்களாகவும் இந்நடுகள் வீரர்கள் இருக்கலாம். இந்நிலத்திற்கு உரிமையாளர்களான ஆசிரியர் பெருமான் வெங்கடேசன் ஆகியோர் தம் நிலங்களில் விளையும் முதல் படையலை சிலைக்காரன் என்று அழைக்கப்படும் இந்த தெய்வங்களுக்கு வைத்து வணங்கிய பிறகு வீட்டிற்கும் விற்பனைக்கும் எடுத்துச் செல்வோம் என்று கூறுகின்றனர்.
மேலும் தொல்காப்பியம் சங்ககாலம் தொட்டு நடுகல் வழிபாட்டு மரபுத் தமிழர்களிடம் செல்வாக்கு பெற்ற ஒன்று. அந்த வகையில் இந்நடுகற்களை போற்றி வணங்கும் கொத்தூர் மக்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் என்று முனைவர் க.மோகன் காந்தி கூறினார்.