குருமூர்த்தங்களின் திருப்பணியை தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தில் இதுவரை 26 ஆதீனகர்த்தர்கள் அருளாட்சி செய்துள்ள நிலையில், தற்போது, 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் திருமஞ்சன வீதியில் சச்சிதானந்த விநாயகர் கோயில் மற்றும் வடக்கு குருமூர்த்தத்தில் உள்ள முந்தைய 15 குருமகா சந்நிதானங்களின் குருமூர்த்த ஆலயங்களின் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, சச்சிதானந்த விநாயகர் கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு, பந்தக்கால் நட்டு, தீபாராதனை காட்டி திருப்பணிகளை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், திருப்பந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனக் கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.