திருப்பூர் ஜூலை: 18
காங்கேயம் ரோடு கான்வென்ட் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பல்வேறு பெயர்களில் சீட்டு குரூப் நடத்தி வந்துள்ளார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் 10 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரையிலான சீட்டு சேர்ந்துள்ளனர். சீட்டு முடிந்தும் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்திருந்த மனுவில் , காங்கேயம் ரோடு கான்வென்ட் கார்டன் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரிடம் 10 லட்சத்திற்கான சீட்டு குரூப்பில் சேர்ந்திருந்தோம். மாதம் தோறும் 40 ஆயிரம் வீதம் தொகை செலுத்தி வந்தோம். 2018 ஆம் ஆண்டு சீட்டு சேர்ந்த நிலையில் 25 மாதங்கள் பணம் கட்டி உள்ளோம். 2020 பிப்ரவரி மாதம் சீட்டு முடிந்தது. இருப்பினும் பல்வேறு காரணங்களை கூறி சீட்டுத் தொகையை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.இது குறித்து கடந்த 26 ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தை திருப்பி தர முடியாது என கொலை மிரட்டல் விடுத்தார். எனவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தங்கள் பணத்தை மீட்டு தருவதோடு கொலை மிரட்டல் விடுத்த ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.